கலைஞனின் படைப்பானது அவன் சார்ந்திருக்கும் அல்லது அவனைச் சூழ்ந்திருக்கும் சூழலினை பதிவு செய்யும் விதமாக அவனுக்குள்ளாகவே உருவெடுக்கிறது. புறத்தூண்டல்கள் யாவும் அவனை படைப்பாளியாய் மாற்றும் படியான வேலைகளை செய்கிறது. அத்தகைய கலைஞன் காலந்தோறும் சூழலில் அமையும் மனிதர்களால் உற்றுநோக்க படுகிறானா? அவனது படைப்புகள் அங்கீகாரத்தினை ஏற்கின்றனவா? என்பதெல்லாம் கேள்விகளாகவே முடிவின்றி அமைகின்றன. காரணம், என்னவென்றால் ஆரம்ப காலங்கள் முன் மொழிந்த ஐரோப்பிய இன வாதமே உலகின் தலை சிறந்த நாகரீகமாக இன்றளவும் கருதப்படுவது தான். பொதுவாக மேலைநாட்டு கலைஞனின் படைப்பு பற்றி வியந்துரைக்கும் வேலைகளை தமிழக கலைஞர்களும் செய்வது வருத்தமடைய வைக்கிறது. அதே நேரங்களில் நம்மிடத்தே அமையப்பெறும் கலைஞர்களின் பல அறிய படைப்புகள் பற்றி அக்கறை கொள்ளாமல் விடுவது கோபம் கொள்ளச்செய்கிறது. கீற்று எனும் இணையங்களிலும் விகடனிலும் உலாவரும் ஓவியர் ட்ராஸ்கி மருது இத்தகைய ஐரோப்பிய அக்கறை காட்டும் விதமான கட்டுரைகளை வெளியிடும் நிலையைக்
காணக்கண்டேன்.தூரிகைதடங்கள் என்ற தலைப்பில் யுஜின் டெலாக்ராய்க் (பிரான்ஸ்) கஷ்தவ் கொர்பர்ட் (பாரிஸ்) ஜூலியட் கொர்பர்ட் கஸ்டவ் க்ளிம்ப்ட் (வியன்னா) ஜாக் லூயிஸ் டேவிட் (பிரான்ஸ்) போன்றோரின் படைப்புகள் பற்றியும் வாழ்க்கை வரலாறு பற்றியும் விளக்குகிறார் ஆனால் நெல்லை குமரி தஞ்சை திருச்சி ஆகிய
பெருநகரங்களில் குப்பை கொட்டும் வீதிச்சுவர்களில் கைவண்ணத்தை காட்டும் ஓவியங்களை கண்டேன். அவைகளின் நேர்த்தி பிற ஓவியங்களில் நான் கண்டதில்லை. பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் மூன்று வகை மட்டுமே தூரிகையாக பயன்படுத்திய கருவிகள் கொள்ளிக்கட்டையும் சுன்னக்கட்டிகளும் செங்கல்துண்டுக்களுமே. அருகில் விசாரித்ததில் அவ்வோவியன் முடிக்குள் மறைந்த முகத்தினையும் அழுக்கேறிய ஆடைகளையும் கொண்டிருந்தானென முகவரி கொடுத்தனர். கீழ் காணும் ஓவியம் வடசேரியில் கிடைக்கபட்டது கடைசி ஓவியம் நெல்லையில் கிடைக்கபட்டது. மாருதி ஆர்ட்ஸ், விசன் ஆர்ட்ஸ் போன்ற நெல்லை ஓவியர்களிடம் விசாரித்ததில் அத்தகைய சித்திரத்தை கண்டு தாங்களும் வியந்ததாக கூறினர். நீரில் நிழலாடும் கரை விளிம்பு பகுதிகளை காட்டி இருப்பது அருமை கடைசி படத்தில் பின்புறமாக நடந்து செல்லும் பெண்ணின் பூவினைக்காட்ட கலைஞன் சுவரை சுண்ணாம்பு சுவர் வரும் வரை சுரண்டியிருக்கும் விதம் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. இத்தகைய கலைஞர்கள் ஏன் பலராலும் அறியப்படவில்லை, அவ்வோவியன் செய்த தவறென்ன? அவனது படைப்பில் உள்ள பிழை என்ன? இத்தகைய சாயம்போகும் கலைகளின் மீட்சி நிலை உருவெடுக்குமா?